நாம தேவர்

 பாண்டுரங்கா நீ இப்போது சாப்பிடாவிட்டால், உன் மீதே மோதி என் மண்டையை உடைத்துக் கொள்வேன்” என்றும்,  “உன்னை பக்தியோடு காணவரும் பக்தர்கள் மிதித்துவிட்டுச் செல்லும் வகையில் உன் ஆலயத்தின் படிக்கட்டுகளாக நான் ஆக வேண்டும் என்ற  பக்தன்  நாமதேவர் - விளக்கும் எளிய பக்தி கதை

துறவி நாமதேவர் (29 அக்டோபர், 1270 - 1350) (மராத்தி: संत नामदेव) (ஒரு வர்க்காரி வைணவத் துறவி. இவர் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள இங்கோலி மாவட்டத்தில் உள்ள நர்சி-பாமனி என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தை தாம்சேட் ஒரு தையற்கலைஞர், இவருடைய தாயார் கோனாபாய்.

இவருடைய சமயக்கருத்துக்கள், வாழ்க்கையை வாழும் முறை பற்றியும் திருமணத்தின் மூலமும் குடும்ப பொறுப்பு ஏற்பதின் மூலமும் ஒருவர் வாழ்க்கையில் தெளிவு பெறலாம் என்னும் கருத்தை வலியுறுத்தின. இவர் பண்டரிபுரத்தில் வாழ்ந்து பகவான் விட்ட்லரின் பெரும் பக்தனாக வாழ்ந்தவர். விட்டலர் மீது பல பதிகங்களைப் பாடியவர். இவரது பாடல்களில் சில சீக்கியர்களின் குரு கிரந்த் சாகிப் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவரது சீடர்களில் ஒருவர் ஜனாபாய் ஆவார்.

ஒருசமயம் நாமதேவின் தந்தை பாண்டுரங்கனுக்கு நைவேத்தியம் படைத்துவிட்டு, `இது பாண்டுரங்கனுக்கு’ என்று சொன்னாராம். அப்போது நாமதேவ் ஐந்து வயதுச் சிறுவன். தந்தை சொன்னதை அப்படியே நம்பிவிட்டான்.“பாண்டுரங்கா உனக்குத்தான் வந்து சாப்பிடு” என்றான். “பாண்டுரங்கன் வரவில்லை.

இரண்டு முறை, மூன்று முறை, பலமுறை கூப்பிட்டும் பாண்டுரங்கன் வரவில்லை. தான் கூப்பிட்டு பாண்டுரங்கன் வரவில்லையே என்ற கோபம் நாம்தேவுக்கு ஏற்படுகிறது. பாண்டுரங்கா நீ இப்போது சாப்பிடாவிட்டால் உன் மீதே மோதி என் மண்டையை உடைத்துக் கொள்வேன்” என்றான் சிறுவன் நாம்தேவ். அப்போதும் பாண்டுரங்கன் வரவில்லை. மனம் வெறுத்துப் போன நாம்தேவ், பாண்டுரங்கனின் சிலை மீது முட்டிக் கொள்ள முயன்றான். உடனே நாம்தேவின் முன்னால் தோன்றி அவனை அரவணைத்துக் காக்கிறான் பாண்டுரங்கன்.

நாமதேவர் ஊட்டிவிட பாண்டுரங்கன் சாப்பிடுகிறார். பாண்டுரங்கன் ஊட்டிவிட சிறுவன் நாமதேவர் சாப்பிடுகிறார். அன்றிலிருந்து இருவரும் இணைபிரியா நண்பர்களாகின்றனர், எண்ணற்ற பாடல்களை நாமதேவர் எழுதிப் பாடி பாண்டுரங்கனுக்கு தினம் தினம் பாமாலை சூட்டினார்.

நாம்தேவின் பக்தியை மெச்சி வைகுண்டத்துக்கே என்னோடு வந்துவிடு என்கிறான் பாண்டுரங்கன். ஆனால் அதை மறுத்த நாமதேவர் “உன்னை பக்தியோடு காணவரும் பக்தர்கள் மிதித்துவிட்டுச் செல்லும் வகையில் உன் ஆலயத்தின் படிக்கட்டுகளாக நான் ஆக வேண்டும் என்றார், அப்படியே நாம்தேவுக்கு அருள்பாலித்தாராம் பாண்டுரங்கன்.

ஜெய் ஜெய் இராம் க்ருஷ்ண ஹரி