நான் யார்

 

நான் யார் என்ற ஆத்ம விசாரனையை விளக்குவது நிர்வாண சதகமா? ஷடகமா?

ஆதி சங்கரரை நாம் எல்லோரும் ஓர் ஆன்மிகவாதியாகவே காண்கிறோம். அவர் ஓர் அற்புதமான கவி என்பதை அவருடைய கவிதைகளைப் படிக்கும்போது அறிந்துகொள்ளலாம். 

முக்கியமாக, ‘நிர்வாண ஷடகம்’. (சதகம் என்பது 100 பாடல்கள்)... நிர்வாண ஷடகம் என்பது 6 பாடல்கள். ஆனால், அந்த 6 பாடல்களுக்குள் இந்தப் பிரபஞ்சத்தையே அடக்கிவிட்டார் ஆதி சங்கரர் என்ற மஹாகவி. இது ஆத்மஷடகம் என்ற பெயராலும் அறியப்படுகிறது. 

தனது குருநாதர் ஸ்ரீ கோவிந்த பகவத்பாதரை நர்மதை நதிக்கரையில் முதலில் தரிசனம் செய்கிறார் ஸ்ரீ சங்கரர். ” நீ யார்?” என்று குருநாதர் கேட்க, எட்டு வயதான ஸ்ரீ சங்கரன் மிகுந்த விநயமுடன் அதற்குக் கூறிய பதிலே “நிர்வாண ஷடகம்” என்ற ஸ்லோகம்.

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் தனது எட்டாவது வயதில் என்போன்ற அக்ஞானிகளுக்கும் அதுபோன்ற அத்வைத நிலை எட்ட வேண்டும் என்ற கருணையினால் தனது குருவிடம் பணிவோடு “தான் யார்?” என்று உரைத்த உயர்ந்த விளக்கம்.

1. மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்,

ந ச ச்ரோத்ர ஜிஹ்வே, ந ச க்ராண நேத்ரே,

ந ச வ்யோம பூமிர், ந தேஜோ ந வாயு:

சிதானந்த ரூப சிவோஹம்! சிவோஹம்!

மனம் புத்தி ஆணவச் சித்தங்கள் இல்லை; இரு

கண்ணில்லை; செவி, நாக்கு நாசியும் இல்லை;

வானில்லை மண்ணில்லை; வளி ஒளியும் இல்லை;

சிதானந்த ரூபம் சிவோஹம்! சிவோஹம்!

2. ந ச ப்ராண சங்க்யோ, ந வை பஞ்சவாயு:

ந வா சப்த தாதுர், ந வா பஞ்சகோசா:

ந வாக் பாணி பாதம், ந சோப ஸ்தபாயு:

சிதானந்த ரூப: சிவோஹம்! சிவோஹம்!

உயிர் மூச்சு மில்லை; ஐங் காற்றும் இல்லை;

எழு தாதும் இல்லை; ஐம் போர்வை இல்லை;

கை கால்கள் இல்லை; சினை வினையும் இல்லை;

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

3. ந மே த்வேஷ ராகௌ, ந மே லோப மோஹௌ,

மதோ நைவ, மே நைவ மாத்ஸர்ய பாவ:

ந தர்மோ ந சார்த்தோ, ந காமோ ந மோக்ஷ:

சிதானந்த ரூப சிவோஹம்! சிவோஹம்!

வெறுப்பில்லை விருப்பில்லை; மையல் பற்றில்லை;

சிறு கர்வம் இல்லை; அழுக்காறும் இல்லை;

அறம் பொருள் நல்லின்ப, வீடு பேறில்லை;

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

4. ந புண்யம் ந பாபம், ந சௌக்யம் ந துக்கம்!

ந மந்த்ரோ ந தீர்த்தம், ந வேதா ந யக்ஞா:

அஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந போக்தா,

சிதானந்த ரூப சிவோஹம்! சிவோஹம்!

வினை வேட்கை இன்பங்கள், துன்பங்கள் இல்லை;

மறை வேத தீர்த்தங்கள், வேள்விகள் இல்லை;

உணவில்லை, உணவாக்கி உண்பவரும் இல்லை!

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

5. ந ம்ருத்யுர் ந சங்கா, ந மே ஜாதி பேத:

பிதா நைவ, மே நைவ மாதா, ந ஜன்மா

ந பந்துர் ந மித்ரம், குருர் நைவ சிஷ்ய:

சிதானந்த ரூப சிவோஹம்! சிவோஹம்!

மரணங்கள் ஐயங்கள், உயர்வு தாழ்வில்லை;

தந்தை தாயில்லை; தரும் பிறப்பில்லை;

உற்றார்கள் சுற்றார்கள், குரு சீடர் இல்லை;

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

6. அஹம் நிர்விகல்போ, நிராகார ரூபோ,

விபுத் வாச்ச, சர்வத்ர, சர்வேந்த்ரி யாணாம்

நசா சங்கடம் நைவ, முக்திர் ந மேயா

சிதானந்த ரூப: சிவோஹம்! சிவோஹம்!

மாற்றங்கள் இல்லை; பல தோற்றங்கள் இல்லை;

எங்கெங்கும் எல்லாமும், எதனுள்ளும் இவனே;

தளையில்லை; தடையில்லை; வீடுபேறில்லை;

சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

நிர்வாண ஷடகம் பாடலுக்குப் பக்கம் பக்கமாக விளக்கம் எழுதிக்கொண்டு போகலாம். 

பஞ்ச வாயு

ப்ராணன் – உள்ளே இழுக்கும் காற்று

அபானன் – அழுக்குகளை வெளியேற்றும் காற்று;

சமானன் – செரிக்கும் காற்று;

உதானன் – உறுப்புகளை இயக்கும் காற்று;

வ்யானன் – செய்கைகளை இயக்கும் காற்று.

சப்த தாதுக்கள்

ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, விந்து.

பஞ்சகோசம் (போர்வைகள்)

அன்னமய கோசம் – உணவால் ஆனது

ப்ராணமய கோசம் – காற்றால் ஆனது;

மனோமய கோசம் – மனதால் ஆனது

விஞ்ஞானமய கோசம் – அனுபவத்தால் ஆனது

ஆனந்தமய கோசம் – இன்பத்தால் ஆனது